Pages

Tuesday, March 2, 2010

குளிர் (சிறுகதை)

மார்கழி மாதத்தின் கடைசி நாள். ரிடயர்ட் ஆபிசர் விஸ்வநாதன் காலை பத்து மணியளவில் தனது காலை பணிகளை எல்லாம் முடித்து விட்டு வீட்டு தாழ்வாரத்தில் அமர்ந்து ஓய்வாக கண்ணை மூடியவாறு மனக்கண் முன் தனது வாழ்கையை திரும்பிப் பார்கலானார்.

நடுத்தர குடும்பத்தில் பிறந்த விஸ்வநாதன் அரசாங்க உத்தியோகத்தில் கடைநிலை ஊழியராக சேர்ந்து பின்பு படிபடியாக உயர்ந்து 25 ஆண்டுகள் வேலை பார்த்து போன மாதம் தான் ஓய்வு பெற்றிருந்தார். மங்களம் என்ற பெண்ணை கைபிடித்து இரு மகன்களை பெற்று எடுத்திருந்தார். மகன்கள் இருவரையும் இயன்ற அளவு படிக்க வைத்திருந்தார். மூத்த மகன் இறுதி வகுப்பு வரை படித்து விட்டு அதற்கு மேல் படிக்க விருப்பம் இல்லாததால் ராணுவ வேலையில் தேர்வாகி அதில் பணியாற்றி கொண்டிருந்தான். இளைய மகன் பசுபதி ஓரளவு நன்றாக படித்ததால் கல்லூரியில் மேல் படிப்பை படித்து விட்டு தனியார் கம்பெனி ஒன்றில் பொறுப்பான வேலையில் இருக்கிறான். அப்பாவுக்கு மூத்த மகன் மேல் செல்லம். இளைய மகன் அம்மா செல்லம்.


யோசித்து கொண்டிருந்தவருக்கு மனைவி மங்களம் குரல் தட்டி எழுப்பியது. தபால்காரன் கொண்டு வந்து கொடுத்த கடிதத்தை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தார். வழக்கம் போல் மூத்த மகனிடமிருந்து கடிதம் வந்திருந்தது. அதில் நலம் விசாரித்து விட்டு தனது வேலை சூழ்நிலை பற்றி எழுதியிருந்தான். எல்லையில் குளிர் அதிகமாக இருப்பதால் பணியாற்றுவது சிரமமாக இருப்பதாகவும் எனினும் அதை தானும் சக வீரர்களும் பொருட்படுத்தாமல் அயல் நாட்டு தீவிரவாதிகளை இரவு பகல் பாராமல் கண்காணித்து வருவாதகவும் குறிப்பிட்டிருந்தான். விசுவநாதனுக்கு பெருமையாக இருந்தது. உள்ளே வேலையாக இருந்த மங்கலத்தை அழைத்து கடித விபரத்தை படித்து காட்டி மூத்த மகனை பற்றி வாயார புகழ்ந்தார்.

மங்கலத்திற்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் தனது இளைய மகனை விட்டுக் கொடுக்காமல் அவனை பற்றி கூற ஆரம்பித்தார். என்ன இருந்தாலும் அவன் அம்மா செல்லம் ஆயிற்றே. உங்களுக்கு ஒன்று தெரியுமா நம்ம பசுபதி இந்த மார்கழி மதம் முழுவதும் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து தலைக்கு குளித்து தினமும் கோவிலுக்கு சென்று வருவாதகவும் அதற்கு காரணம் கேட்டதற்கு தனது தாய் தந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும் வயதாகி கொண்டிருக்கும் அண்ணனுக்கு சீக்கிரம் நல்ல வரன் அமைய வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருப்பதாகவும் கூறினான்.



இதை கேட்ட விச்வனதனுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. எப்படியோ நாம் இருவரும் நாட்டுக்கு ஒரு பிள்ளையையும் வீட்டுக்கு ஒரு பிள்ளையையும் பெற்று எடுத்திருக்கிறோம் என்று மனைவியிடம் சொல்லி அக மகிழ்ச்சி அடைந்தார். அவர்கள் இருவரது மனமும் மார்கழி மாத குளிரை போல் பெரும் மகிழ்ச்சி அடைந்திருந்தது.